Our Feeds


Friday, June 4, 2021

www.shortnews.lk

இலங்கை குறித்த அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தில் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை.

 



(நா.தனுஜா)


இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியான டெபோரா கே.ரோஸினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென அமெரிக்காவிடம் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் 12 வருட பூர்த்தியையொட்டி அமெரிக்க காங்கிஸ் கட்சியின் பிரதிநிதியான டெபோரா கே.ரோஸினால் மேலும் சில பிரதிநிதிகளுடன் இணைந்து ‘பொறுப்புக் கூறலை நிலைநாட்டும் நோக்கிலான செயற்றிறன்மிக்க சர்வதேசப் பொறிமுறை’ மற்றும் ‘இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு’ ஆகிய தலைப்புக்களில் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது.

இத்தீர்மானம் தொடர்பான தமது நிலைப்பாட்டை கடந்த புதன்கிழமை வெளிப்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சு, இந்தத் தீர்மானம் ஒருதலைப் பட்சமானதும் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி குறித்த தீர்மானம் வெறுமனே உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல எனவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரஸில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்றும் வெளிவிவகார அமைச்சு சாடியிருந்தது.

இந்நிலையில் தற்போது டெபோரா கே.ரோஸினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அடுத்தகட்ட நகர்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என்று அமெரிக்க வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஆணைக்குழுவுக்கு அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரகம் இன்று (04) அறிவித்திருக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »