Our Feeds


Friday, June 4, 2021

www.shortnews.lk

ரிஷாத் பதியுத்தீனின் மனு விசாரனையிலிருந்து நீதியரசர் ஜனக் டி சில்வாவை தொடர்ந்து நீதியரசர் யசந்த கோதாகொடவும் இன்று விலகினார்.

 



(எம்.எப்.எம்.பஸீர்)


முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிஐடியினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொடவும் விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து தான் விலகுவதாக இன்று (04) குறித்த மனு மீதான பரிசீலனைகள் இடம்பெற்ற போது, நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்தார்.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரக செயற்பட்ட தான், மனுதாரர்கள் இருவர் குறித்தும் அந்த ஆணைக்குழுவில் சாட்சிகளை செவிமடுத்துள்ளதாக குறிப்பிட்டு, அதனடிப்படையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் ஜனக் டி சில்வா கடந்த மே 28 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது நீதியர்சர் யசந்த கோதாகொடவும் மனு மீதான பரிசீலனைகளிலிருந்து விலகியுள்ளார்.

அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையிலான, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே, இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக திறந்த மன்றில் நீதியரசர் யசந்த கோதாகொட அறிவித்தார்.

இந்த நிலையில் குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »