ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தாக்குதல்களை, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
உள்ளூர் நேரப்படி இன்று (30) இந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த ரொக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை என்ற போதிலும், ஐ. எஸ்-கே மூலம் இது ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு செயற்படும் சத்தம் கேட்டதாகவும், விமான நிலையத்திற்கு அருகில் புகை எழும்புவதை காணமுடிந்ததாகவும் தெரிவித்தனர்.
நாளையுடன் அமெரிக்க துருப்புக்கள், ஆப்கானிலிருந்து வெளியேற இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (29) இரவு ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடத்தியது.
கடந்த வாரம் வியாழக்கிழமை, ஐ. எஸ் கே என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இரட்டை தற்கொலை குண்டுதாக்குதல்களில் 13 அமெரிக்க சேவை உறுப்பினர்கள் உட்பட 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குறைந்தது 200 பேர் காயமடைந்தனர்.
