ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் உண்மையான பலனை பெறுவதற்கு அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும், இந்த செயன்முறையின் உண்மையான பலன் இவ்வாறு வீட்டில் இருப்பதன் ஊடாகவே வெளிப்படும் எனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின், பொது சுகாதார சேவைகள் உதவி பணிப்பாளர் விசேட வைத்தியர் சுசீ பெரேரா கருத்து வெளியிடுகையில், அத்தியாவசிய காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸை விடவும் டெல்ட்டா திரிபானது மிகவும் வேகமாக பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமெனில், பக்கத்து வீட்டுக்கு கூட யாரும் செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
1 அல்லது 2 மீற்றர் தனிமனித இடைவெளியை பேணுவது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசங்களை அகற்ற வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
