தற்போதைய கொரோனா நிலைமையில் நாட்டை இன்னும் மூன்று வாரங்களுக்கு முடக்கவேண்டுமென விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
3 வாரங்களில் நாட்டின் கொவிட் நிலைமையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும், அதனைத் தொடர்ந்து நாட்டை திறப்பது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறும் அந்த சங்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
தற்போது பயணத்தடைகள் அமுலில் இருந்தாலும், அதிகளவான மக்கள் வீதிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிவதாகவும் எனவே கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுடன் இந்த முடக்கத்தை இன்னும் 3 வாரங்களுக்கு நீடிக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வைரஸ் பரவைலக் கட்டுப்படுத்தல், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்தல், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை குறைத்ததன் பின்னரே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் பொருளாதாரத்தை வழமையான நிலைமைக்கு கொண்டுவரும் அதேவேளை, மனித உயிரிர்களை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத விடயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குறித்த அறிக்கையில் கீழ்வரும் பரிந்துரைகளை சுகாதார அமைச்சுக்கு முன்வைத்திருந்தது.
- நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் ஊடாக சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அழுத்தங்கள் குறையும்
- நீண்ட கால வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான பயன்பாடு மற்றும் இதற்கு குறுகிய கால வழியைப் பற்றி எதிர்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியுடன் நாட்டை மீள திறக்க வேண்டும்
- அதற்காக தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடைகளை மேலும் கடுமையாக்கி, வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.
- கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதன் ஊடாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்
- கொரோனாவால் மிகவும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சுகாதாசேவையை, ஏனைய நோயாளர்களின் நலனுக்காகவும் சேவையாற்றும் நிலைமைக்கு மாற்றுதல்.
மேலும், ஜனாதிபதி உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் அனைவரும் உலக சுகாதார அமைப்புடன் தொடர்ந்தும் தொடர்பை பேணி வருவதோடு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
