Our Feeds


Tuesday, November 30, 2021

ShortNews

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை தூற்றி இவ்விடயத்தை கட்டுப்படுத்த முடியாது - Prof. ரொஹான் குணரத்ன



நேர்காணல் : நிர்ஷன் இராமானுஜம்

இனியொரு தாக்குதல் இடம்பெறக்கூடிய சாத்தியம் உண்டு. பாதுகாப்புத்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் ஆளுமையுள்ளவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சிறந்த முறையில் இயங்குவார்களேயானால், தாக்குதல் இடம்பெறுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும். அதனைத் தவிர, முஸ்லிம்களுடன் அரசாங்கமும் சிங்கள மக்களும் அன்போடு இருக்க வேண்டும். முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைத் தூற்றி இவ்விடயத்தை கட்டுப்படுத்த முடியாது. முஸ்லிம்களில் அதிகமானோர் அடிப்படைவாதத்தைப் பின்பற்றினாலும் அவர்களில் சிறு எண்ணிக்கையிலானோரே வன்முறையில் ஈடுபடுகின்றனர் என தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளரும் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச ஆய்வாளருமான பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்தார்.

தமிழன் வார இதழுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவருடனான நேர்காணலின் முழு வடிவம் வருமாறு,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் சக்தி இயங்கியதா? அல்லது தனிநபர்கள் செயற்பட்டார்கள் என நீங்கள் கருதுகிறீர்களா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஒரேயொரு சக்திதான் இருந்தது. இது தொடர்பில் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான சஹ்ரான் ஹாசீம் என்ற நபர் மிகத் தெளிவாக காணொளியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அல்லாஹ் என்ற இறைவனுக்காகவே தாக்குதல் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இஸ்லாம் மதத்துக்காகவும் தாக்குதல் மேற்கொள்வதாக காணொளியில் கூறியுள்ளார்.

சாதாரண முஸ்லிம்கள் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் சமாதானத்தை மிகவும் நேசிக்கிறார்கள். எனினும், சலாபி குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாம் மதத்திலிருந்து அடிப்படைவாதத்தை பின்பற்றி, அதன் பிறகு ஒருசிலர் பயங்கரவாதம் பக்கம் சென்றார்கள். அவ்வாறான ஒருவர்தான் சஹ்ரான் ஹாசீம்.

இந்தத் தாக்குதல் அரசியல் சூழ்ச்சியல்ல. ஆனாலும், அரசாங்கம் ஒரு தவறை இழைத்திருக்கிறது. இந்தச் சம்பவத்தின் விசாரணைகள் தொடர்பில் இரு வாரங்களுக்கு ஒருமுறையேனும் ஊடக சந்திப்பை ஏற்படுத்தி மக்களை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு விளக்கியிருக்க வேண்டும்.

அரசாங்கம் இந்த விடயத்தில் முறையாக இயங்காத காரணத்தினால் தான் சூழ்ச்சிமிக்க கதைகள் உருவாகியுள்ளன. நான் வெளியிட்டுள்ள காணொளியை பார்ப்பீர்களேயானால், சஹ்ரான் ஹாசீம் என்பவர் தனது மதத்தின் ஊடாக உருவாக்கிய அடிப்படைவாதத்தின் காரணமாகவே தாக்குதலை நடத்தியுள்ளார் என்பது தெளிவாகும்.

அனைத்து மதங்களிலிருந்தும் அடிப்படைவாதம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதங்களிலும் அடிப்படைவாதம் உண்டு. சீக், ஜூவிஷ் மதங்களிலும் இருக்கிறது. இஸ்லாம் மதத்திலிருந்து உருவான அடிப்படைவாதமே தாக்குதல் நடத்தக் காரணமாகும்.

உங்களால் வெளியிடப்பட்ட காணொளியில், அல்லாஹ் எங்களை மன்னிப்பான் என்று சஹ்ரான் குறிப்பிடுகிறாரே?

சஹ்ரான் ஹாசிம் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பின்பற்றுவோருக்கு ஒருவகையிலான எண்ணங்கள் உண்டு. இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டால் சுவர்க்கத்துக்குச் செல்லலாம், இறைவனைக் காணலாம், அவர்கள் செய்த பாவங்கள் அனைத்துக்கும் மன்னிப்பு கிடைக்கும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என 70 பேரை சுவர்க்கத்துக்கு அழைத்துச்செல்லலாம், அழகிய இளம் பெண்கள் 72 பேர் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் இருக்கிறது. அதில் உண்மையில்லை. அடிப்படைவாதிகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே அவை. இவற்றை அரசாங்கம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாத காரணத்தினாலேயே ஒவ்வொருவரும் வெவ்வேறான கருத்துகளை வெளியிடுகிறார்கள்.

இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கத்தால் ஏன் நிறைவுக்கு கொண்டுவர முடியாதுள்ளது?

நான் ஓர் உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறேன். அமெரிக்காவில், 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி பாரிய தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கலீட் ஷெயிக் மொஹமட். அவரை கடந்த மாதம் தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அந்த விசாரணைகள் 20 வருடங்களாக தொடர்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதனுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தாலும் கூட, தாக்குதல் நடத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்கியவர்களைக் கண்டறிய வேண்டியுள்ளது. எந்தப் பள்ளிவாசல், எந்த மத்ரஸாக்களை பயன்படுத்தினார்கள்?, எவ்வாறான புத்தகங்களை படித்தார்கள்?, அவற்றை நாட்டுக்கு கொண்டுவந்தது யார்?, அவற்றைப் பிரசாரப்படுத்தியது யார்? ஆகியவை ஆராயப்பட வேண்டும். அந்த செயன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. பலர் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு உதவியவர்கள் குறித்தும் தேடவேண்டியுள்ளது.

மிகப்பெரிய தாக்குதலை நடத்தி உயிர்ப்பலியெடுத்த சம்பவம் என்பதால் வெகு சீக்கிரத்தில் விசாரணைகளை முடித்துவிட முடியாது. இது நீண்டகால செயன்முறையாகும்.

உங்களுடைய அறிவுக்கு எட்டிய வகையில், இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைய இன்னும் எவ்வளவு காலம் செல்லும்?

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடையவர்களுக்கு இன்னும் ஒருவருட காலத்துக்குள் தண்டனை கிடைக்கப்பெறும். எனினும், இந்தத் தாக்குதலை நடத்த கட்டமைப்பை உருவாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு சில ஆண்டுகாலம் செல்லும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை மாத்திரமே வெளியாகியிருக்கிறது. ஏனைய அறிக்கைகளில், இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டமை, அதற்குக் காரணமானவர்கள் குறித்து தகவல்கள் உள்ளன.

நியூசிலாந்து கிறிஸ்ட்சேர்ச்சில் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல் நடத்துவதாக சஹ்ரானின் காணொளியில் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தாக்குதல் 2019, மார்ச் 15இல் இடம்பெற்றது. அவ்வாறெனின், ஒருவாரத்துக்குள் இலங்கையில் தாக்குதலை நடத்த எவ்வாறு திட்டமிட முடியும்?

தாக்குதல் ஒன்றை நடத்த வேண்டுமென சஹ்ரான் ஹாசீம் நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். 2017, மார்ச் மாதம் முதல் அவருடைய திட்டமிடல்களுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுள்ளன. அவர், தாக்குதல் நடத்துவதற்கான ஆட்களை தெரிவுசெய்து, மார்க்கம் குறித்து சொல்லிக்கொடுத்து, பயிற்சிகள் வழங்கி தயார்படுத்தியிருந்தார்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே, அன்றைய நாளில் தாக்குதல் நடத்துவதென சஹ்ரான் ஹாசீம் தீர்மானித்திருந்தார். அதற்கு ஒரு காரணமாகவே நியூசிலாந்து தாக்குதலை அவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்தக் குழு, நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல் நடத்த தயாராக இருந்தது.

நௌபர் மௌலவி என்பவரே சஹ்ரானை அடிப்படைவாதத்துக்கு அழைத்துச்சென்றார். இருவருக்குமிடையில் முறுகல் நிலையொன்று தோன்றியது. நாடு முழுவதும் தாக்குதல் நடத்த வேண்டுமென நௌபர் மௌலவி திட்டமிட்டார், உடனடியாக தாக்குதலை மேற்கொள்ள வேண்டுமென சஹ்ரான் ஹாசீம் விரும்பினார்.

சஹ்ரானுக்கும் நௌபர் மௌலவிக்கும் இடையில் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது?

நௌபர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரி. நாட்டில், பலரும் பிரதான சூத்திரதாரி குறித்து வெவ்வேறான கருத்துகளை வெளியிடுகிறார்கள். நான் நௌபர் மௌலவியுடன் பல மாதங்கள் உரையாடியிருக்கிறேன்.

அடிப்படைவாதம் குறித்து பல நூல்களை ஆய்வுசெய்து, தாக்குதலை நடத்துவதற்காக நபர்களை இணைத்துக்கொண்டு, பயிற்சிகளை வழங்கியவர் நௌபர் மௌலவிதான். அவர் கட்டாரில் இருந்தார். அங்கு 20 வருடமாக பணியாற்றிய நிலையில் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்துகொண்டார்.

ஐ.எஸ். அமைப்பு குறித்து மிகப்பெரிய இணையத்தளம் ஒன்றை தமிழ்மொழியில் அவர் உருவாக்கினார். இந்த அமைப்பு தொடர்பில் தமிழ்நாட்டில் கூட இவ்வாறானதொரு இணையத்தளம் உருவாக்கப்படவில்லை.

2018ஆம் ஆண்டு நௌபர் மௌலவி இலங்கைக்கு வந்தார். அதன் பின்னர் சஹ்ரானுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இருவருக்குமிடையில் அதற்கு முன்னர் தொடர்புகள் இருந்தாலும் ஐ.எஸ். குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கவில்லை.
நௌபர் மௌலவி, சஹ்ரானை காத்தான்குடியில் சந்தித்து ஐ.எஸ். கொள்கை, கோட்பாடுகள் அடங்கிய பென்ட்ரைவ் ஒன்றை கொடுத்துள்ளார். அதிலுள்ள தகவல்கள், காணொளிகளைப் பார்த்தபின்னர் முழுவதுமாக அடிப்படைவாதத்துக்குள் சஹ்ரான் உள்ளீர்க்கப்பட்டதாக அவருடைய மனைவி ஹாதியா என்னிடம் கூறினார்.

அதன்பின்னர், சஹ்ரான் மிகக் கொடுமையான வகையில் அடிப்படைவாதத்தை தொடர்ந்தார். இஸ்லாத்தை பின்பற்றாதோரை, வேற்று மதத்தவர்களை கொலைசெய்ய வேண்டுமென அவர் நினைத்தார்.

இந்தத் தாக்குதலுடன் சர்வதேச தொடர்பு இல்லையென்று நினைக்கிறீர்களா?

அவ்வாறு சொல்வதற்கு சாதகமான காரணிகள் இல்லை, தரவுகளும் கிடையாது. அவர்கள் உபயோகப்படுத்திய தொலைபேசிகள், கணினிகள், சேர்வரில் உள்ள விடயங்கள், எழுதிய புத்தகங்கள், உபயோகித்த கருவிகள் என்பவற்றை நோக்கும்போது வெளிநாட்டிலிருந்து புலனாய்வுப் பிரிவோ, வேறு குழுக்களோ தொடர்புபடவில்லை, எந்தவொரு அரசாங்கமும் உதவவில்லை. இது முற்றுமுழுதாக அடிப்படைவாதத்திலிருந்து தோன்றியதாகும்.

சஹ்ரானின் 40 காணொளிகள் எங்களிடம் உள்ளன. ஆய்வின் பிறகு அவற்றை நாம் வெளிப்படுத்துவோம்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் அரசியல் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளாரே, அதற்கு உங்களுடைய பதில் என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், பேராயரின் செயற்பாடுகள் தான் 1983, ஜூலை கலவரம் போன்ற வன்முறை இடம்பெறாதவண்ணம் தடுத்தன. அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாமென சிங்கள மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

நாங்கள் மேற்கொண்ட விசாரணைகள், அவை மேற்கொள்ளப்படும் விதம் குறித்து பேராயருக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாத காரணத்தினால் அவருக்கு கோபமும் வருத்தமும் மேலோங்கியுள்ளது. நாம் அவரை மதிக்கிறோம். அரசு என்ற வகையில் ஒவ்வொரு மதத் தலைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கிழக்கில் ஏராளமான பயிற்சி முகாம்கள் இருந்தன. ஹம்பாந்தோட்டை, நுவரெலியாவிலும் இருந்தன. இவ்வாறு பயிற்சி முகாம்களை அமைத்து குண்டுகளைத் தயாரிப்பதற்கு நிதி வழங்கியது யார்?

ஆமாம், ஏராளமான பயிற்சி முகாம்கள் இருந்தன. அவற்றில் மிகப்பெரிய முகாம் வண்ணாத்திவில்லுவில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு ~அபுசுரே| என்று பெயரிட்டிருந்தார்கள். இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்ற நபர்களுக்கும் இலங்கையில் உள்ள அடிப்படைவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை இந்தப் பெயர் காட்டுகிறது. இந்த விடயத்திலிருந்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

அவற்றைத் தவிர, பாதுகாப்பு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அம்பாறையில் மாத்திரம் ஏழு பாதுகாப்பு வீடுகள் இருந்தன. அவர்கள் நாடு முழுவதும் பல்வேறு தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்கள். குறிப்பாக, 2021இல் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த எண்ணியிருந்தார்கள்.

சஹ்ரான் இறந்ததற்குப் பிறகு ரில்வான், ரிஸைனி மௌலவி உள்ளிட்டோர் மற்றுமொரு தாக்குதலை மேற்கொள்ள தயாராக இருந்தார்கள். ரிஸைனி மௌலவி, சஹ்ரானுக்குப் பிறகு அந்த அமைப்புக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இரண்டாவது தாக்குதலை 2019ஆம் ஆண்டே நடத்துவதற்கு தீர்மானித்திருந்தார்கள். 2021இல் நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவதற்கு நௌபர் மௌலவி திட்டமிட்டிருந்தார்.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டவரின் மனைவியான புலஸ்தினி என்றழைக்கப்படும் சாரா ஜெஸ்மினுக்கு என்ன நடந்தது? அவர் உயிருடன் உள்ளாரா? இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுவது பற்றி..?

அவர் ஓர் இந்துப் பெண். ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் மதமாற்றம் செய்யப்பட்டார். கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்திய மொஹமட் ஹஸ்துன் என்பவரை அவர் திருமணம் செய்திருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கு குண்டுகள் அனைத்தையும் தயாரித்தவர் ஹஸ்துன். பயங்கரவாதத்தில் அவர் திறமையானவர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து நாட்களின் பின்னர் 18 பேருடன் சாரா ஜெஸ்மின் சாய்ந்தமருதுக்கு சென்றார். புலனாய்வுப் பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் அவர்கள் இருந்த பாதுகாப்பு இல்லத்தைச் சூழ்ந்தபோது குண்டுவெடிக்கச் செய்து அவர்களில் பலர் உயிரிழந்தனர். அதில் உயிர்பிழைத்த ஹாதியா கூறிய தகவலின் அடிப்படையில் சாரா அவ்விடத்தில் இருந்துள்ளார். வாருங்கள் சுவர்க்கத்துக்குச் செல்வோம் என ஹாதியாவையும் அவர் அழைத்துள்ளார்.

அங்கு குண்டுவெடிப்பு இடம்பெற்ற பின்னர் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். அங்கு அறுவரின் உடல்கள் மாத்திரமே காணப்பட்டன. ஏனையவை சிதறிப்போயிருந்தன. மரபணு பரிசோதனைகளில் சாராவின் உடற்பாகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், புதைக்கப்பட்ட அனைவரினதும் சடலங்களை மீண்டும் தோண்டியெடுத்து மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர். அதன் பிரகாரம் மீண்டும் உடற்பாகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, சாரா ஜெஸ்மினை கண்டதாக அரசியல் சூழ்ச்சிக் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருவர் சாட்சியமளித்தனர். எனினும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இந்தியாவின் ~றோ| அமைப்பின் உதவியுடன் அந்த நாட்டுக்குச் சென்றதாக சிலர் கூறினார்கள். அதுவும் போலியாக பரப்பப்பட்ட தகவல். மரபணு பரிசோதனை அறிக்கை கிடைக்கும்வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இலங்கையில் தாக்குதல் இடம்பெறப்போவதாக அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர். அத்துடன், இந்தியாவின் கூட்டு நிறுவனங்களில் ஒன்றான தாஜ் சமுத்ராவுக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. ஆக, இவற்றை நோக்கும்போது அந்தச் சந்தேகம் உறுதிப்படுத்தப்படுகிறதா?

இலங்கையில் சஹ்ரான் ஹாசீமினால் தாக்குதல் நடத்தப்படப்போவதாக இந்திய பொலிஸார் முதலில் அறிந்துகொண்டார்கள். இந்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் சஹ்ரானின் சகோதரரான ரில்வானுடன் தொழில்நோக்கம் கருதி நெருங்கிப் பழகியுள்ளார். அவர் ஒரு பயங்கரவாதிபோல நடித்து தகவல்களை சேகரித்துள்ளார்.

அதனடிப்படையில்தான் அவர் அங்கிருந்து தகவல்களைப் பெற்று இந்திய பொலிஸார் ஊடாக எமது உளவுத்துறைக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு ஒவ்வொரு இலங்கையரும் நன்றிகூற வேண்டும். இந்தியா தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டது எனக் கூறுவதில் உண்மையில்லை. அத்துடன், தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு ஜமீல் என்ற நபர் வருகைத்தந்தார். எனினும், அவரால் குண்டை வெடிக்கச்செய்ய முடியவில்லை. அவர்தான் தெஹிவளையில் விடுதியொன்றில் குண்டைவெடிக்கச் செய்தார்.

நாம் இந்திய அரசாங்கத்துக்கு நன்றி கூறவேண்டும். இந்திய அரசு ஒருகாலத்தில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை வழங்கியது. விடுதலைப்புலிகள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளிட்ட அமைப்புகளை இந்தியாவின் உத்தர பிரதேசத்துக்கு அழைத்துச் சென்று பயற்சிகளை வழங்கினார்கள். இமாலய பகுதியிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு ஏழு பிரிவுகள் பயிற்சி பெற்றன.

ஆனாலும், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலைப் பொருத்தவரையில், இந்தியா இலங்கைக்கு சேவையை செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்தியாவை அநாவசியமான விதத்தில் தூற்றுவது தவறானதாகும்.

சஹ்ரான் குழுவினருடன் அரச புலனாய்வுப் பிரிவினர் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக அரசியல்வாதிகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனவே? அதன் உண்மைத்தன்மை என்ன?

சஹ்ரானின் குழு, எமது புலனாய்வுப் பிரிவை நிரந்தர எதிரிகளாகப் பார்த்தது. அவர்கள் எமது புலனாய்வுப் பிரிவினரை நாய்கள் என்றே அழைத்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினர் மீது குற்றம் சுமத்துவது தவறு. சஹ்ரானின் மனைவி ஹாதியாவுடன் நான் கதைத்திருக்கிறேன். அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தையும் வாசித்திருக்கிறேன். புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பிருந்ததாக அவர் எந்த இடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை.

ஹாதியாவிடமிருந்து ஒவ்வொரு தடவையும் 22, 100, 300 பக்க அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதில் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை. போலிப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாமென நான் உரிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இராணுவம், பொலிஸ், புலனாய்வுப் பிரிவினர் மீது அவதூறான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். இனியொரு தாக்குதலை அவர்களால் தான் தடுக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் பலவற்றில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அவற்றுக்கு என்ன நடந்தது? அது ஏதாவது ஒரு தரப்பின் திட்டமிட்ட செயற்பாடா?

இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் வெளியிடப்படாத அறிக்கைகளில் இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் இடம்பெறுவதால் பொறுமையாக இருப்போம்.

இவ்வாறானதொரு தாக்குதல் எதிர்காலத்தில் இடம்பெறலாம் என நினைக்கிறீர்களா? அல்லது இடம்பெறாது என்ற உறுதிப்பாட்டை உங்களால் வழங்க முடியுமா?

இனியொரு தாக்குதல் இடம்பெறலாம். அவ்வாறு இடம்பெறுவதை தடுப்பதற்கு அரசாங்கம் மிகச் சிறந்த முறையில் செயற்பட்டுவருகிறது. பாதுகாப்புத்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் ஆளுமையுள்ளவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சிறந்த முறையில் இயங்குவார்களேயானால், தாக்குதல் இடம்பெறுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும்.

அதனைத் தவிர, முஸ்லிம்களுடன் அரசாங்கமும் சிங்கள மக்களும் அன்போடு இருக்க வேண்டும். முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைத் தூற்றி இவ்விடயத்தை கட்டுப்படுத்த முடியாது. முஸ்லிம்களில் அதிகமானோர் அடிப்படைவாதத்தைப் பின்பற்றினாலும் அவர்களில் சிறு எண்ணிக்கையிலானோரே வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

நாம் முஸ்லிம்களை அரவணைத்து, அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முற்றாக ஒழிக்க முயற்சிக்க வேண்டும். சமாதானம், நல்லிணக்கத்தை உண்டுபண்ணுதல் அவசியம். ஏனைய இனத்தவரை கோபத்துடன் பார்த்தால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது.

சர்வதேச ரீதியில் பயங்கரவாதம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்பவர் என்ற வகையில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெற்றால் அது எவ்வாறானதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற மிகப்பெரிய தாக்குதலாக இருக்காது என நான் நினைக்கிறேன். அது எங்கள் பாதுகாப்புத்துறையினரின் கைகளில்தான் இருக்கிறது. தேசிய பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாகும். பயங்கரவாதம் என்பது இலங்கைக்கு மாத்திரமல்ல, முழு உலகமுமே எதிர்நோக்கியுள்ள சவால் என்பதை குறிப்பிட வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »