அபுதாபியில் நடைபெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். இதில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“சுற்றுச்சூழல், பொருளாதாரம், தொற்றுநோய்” என்ற தொனிப் பொருளில் இந்து சமுத்திர மாநாடு டிசம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க எதிர்வரும் 5 ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
காலநிலை மாற்றத்தினால் அதிகரித்துவரும் அச்சுறுத்தலை இந்திய பெருங்கடல் பகுதி எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
முன்னாள் பிரதமர் விக்ரமசிங்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்கள் அங்கு சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளனர்.