(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பிரதேச சபையின் எதிர்வரும் ஆண்டுக்கான (2022) வரவு செலவு அறிக்கை தொடர்பாக இன்று (27) தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் காலை 10.35 மணியளவில் நடைபெற்றது. இந்த அமர்வில் சபையின் 21 அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செயலாளரினால் வரவு – செலவு அறிக்கை வாசிக்க முற்பட்டபோது வரவு செலவு அறிக்கையை தாங்கள் எதிர்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பிரேரணையைக் கொண்டு வந்தபோது அதை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் முன்மொழிய ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுபினர் வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சபையில் தவிசாளரால் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 2 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தலா ஒருவொரு உறுப்பினருமாக 11 உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுபினர் தலா ஒருவருமாக வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக மொத்தம் 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதனையத்து வரவு – செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இவ் வரவு செலவு திட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்க பிறிதொரு நாளில் சபை கூடும் என தவிசாளர் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைத்தார்.