(ஆர்.யசி)
புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஜனாதிபதியின் முழுமையான ஈடுபாடு இருந்தாலும் கூட அரசாங்கத்தின் பிரதான கட்சியே அதனை தடுக்கும் விதத்தில் செயற்படுகிறது. ஜனாதிபதி ஒரு வாக்குறுதியை கொடுக்கும்போது அரசாங்கத்தின் பிரதான கட்சி அதனை நிராகரிப்பது அரசியல் ரீதியிலான குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் எடுக்கும் சில முக்கிய தீர்மானங்கள் குறித்து எம்மிடத்தில் இணக்கப்பாடு இல்லை. அமைச்சரவையிலும், தனிப்பட்ட கலந்துரையாடல்களின் போதும் நாம் இவற்றை சுட்டிக்காட்டியுள்ளோம். எம்மை பொறுத்தவரையில் அமைச்சுப் பதவிகளை விடவும், நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளே முக்கியமானது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்கவுமே அரசாங்கத்துக்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் இருந்துகொண்டு போராடிக்கொண்டுள்ளோம்.
மேலும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களை பொறுத்தவரை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் மட்டுமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் இணக்கம் தெரிவிக்காது, அதனை ஏற்றுக்கொள்ளாத விதத்தில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.