அரசாங்கம் பொருளாதார, அரசியல், சர்வதேசம் ஆகிய அனைத்து பக்கங்களிலும் பிரச்சினைகளை குழப்பிக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
பிடக்கோட்டே பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனைக் கூறினார்.
இலங்கை மக்கள் தமது வாழ்க்கையை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
பொருளாதார ரீதியில் உதவிகளை பெற்றுக்கொள்ள IMF ற்கு செல்வது சிறந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.
தனது ஆட்சிக்காலத்தில் தான் IMF வுடன் இணைந்து கடமையாற்றியதாகவும், IMF தேவையற்ற நிபந்தனைகளை பிறப்பிக்காது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
அவ்வாறு கடும் நிபந்தனைகள் விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவை கடுமையானவை என தான் கூறிய நிலையில், அவ்வாறான நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டு நீக்கியிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.