ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் முஸ்லிம்கள் சென்று சாட்சியம் பதிவு செய்ய வேண்டும் என அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி அர்கம் நூராமித் அறிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம் பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் SHORTNEWS சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே உலமா சபையின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தொடர்பில் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியினால் அந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தக் குழுவுக்கு ஒரு பலமிருக்கிறது.
முஸ்லிம் சமூகத்தில் இரண்டு பக்கமும் கருத்துக்கள் இருக்கும். எனவே உங்கள் கருத்துக்களை அந்தக் குழுவிடம் சென்று ஒப்படையுங்கள். அந்தக் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து மொத்தமாக அவர்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பார்கள்.
அதனால் முஸ்லிம்களுக்கோ, முஸ்லிமல்லாதவர்களுக்கோ ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறது என்றால் ஜனநாயக ரீதியாக தமது கருத்தை அங்கு சென்று ஒப்படைப்பதற்கு அவர்களுக்கு உரிமையிருக்கிறது. அந்த வகையில் அங்கு சென்று அந்த சபையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்படி நாமும் வேண்டிக் கொள்கிறோம் என உலமா சபையின் செயலாளர் அர்கம் நூராமித் தெரிவித்தார்.