(எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் ஷெஹான் மாலக கமகே சிஐடியினரால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையானது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய, தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
‘ ஷெஹான் மாலக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன. அந்த விசாரணையில் அவரது நீண்ட வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. அந்த விசாரணைக் கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டு ஆலோசனை கோரப்பட்டது.
அது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ள சட்ட மா அதிபர், தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவதால் அவரைக் கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படியே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.’ என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்