(இராஜதுரை ஹஷான்)
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவு செய்வதற்கு நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ எதிர்வரும் வாரமளவில் மீண்டும் இந்தியாவுக்கு செல்லவுள்ளார் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் இலங்கைக்கு பயனுடையதாக காணப்படுகிறது. இலங்கைக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவிடமிருந்து கடன்பெறலுக்கான வழிமுறைகளை நிதியமைச்சர் செயற்படுத்தியுள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்கள்,மருந்து வகைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலில் கடனாக பெறப்படும். இந்தியாவிடமிருந்து பெறப்படும் நிதியுதவி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ எதிர்வரும் வாரமளவில் மீண்டும் புதுடில்லிக்கு செல்லவுள்ளார் என்றார்.