ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மூன்றுநாட்கள் உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்கும் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. அந்நாட்டின் தெற்கு மாகாணமான ஸாபுலில் ஷோகாக் என்ற கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு ஹரிடார் என்ற ஐந்து வயது சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். குறித்த சிறுவன் சுமார் 32 அடி ஆழத்தில் இருப்பதை மீட்புப் பணியாளர்கள் கண்டுகொண்டனர்.
இந்நிலையில் இரவு, பகல் பாராமல் சிறுவனை மீட்கும் பணிகள் தலிபான் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்தன. சிறுவன் வீழ்ந்திருந்த கிணற்றுக்கு அருகில் பாரிய குழியொன்றை தோண்டும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், சிறுவன் உயிரிழந்துள்ளதாக தலிபான்களின் உள்துறை அமைச்சின் ஆலோசகர் அனாஸ் ஹக்கானி அறிவித்தார். ஹரிடார் எங்களை விட்டுச் சென்ற விடயத்தை மிகக் கவலையுடன் அறிவிக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹரிடாரை உயிருடன் மீட்க முடியும் என இன்று (18), உள்துறை அமைச்சின் அதிகாரிகள் ஊடக மாநாடொன்றில் தெரிவித்திருந்தனர். எனினும் சிறுவனை மீட்கும் தலிபான்களினதும் பொதுமக்களினதும் முயற்சி தோல்வியடைந்தது.
“சிறுவனை மீட்பது மிகச் சிரமமான காரியமாகும். ஏனென்றால் மீட்புப் பணிகளை முன்னெடுத்துச்செல்லும்போது சிறுவன் மீது மண்திட்டு சரியும் அபாயம் மிக அதிகமாக உள்ளது” என ஸாபுல் மாநில பொலிஸ் பேச்சாளர் ஸாபியுல்லாஹ் ஜவ்ஹர் இன்று மதியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.