பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது வரி சுமையை சுமத்த புதிய வரைபுகளை தயாரிக்கும் அரசாங்கம் சிகரெட் நிறுவனத்திடமிருந்து முறையாக வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்தவில்லை.
நாட்டில் உள்ள வெளிநாட்டு சிகரெட் நிறுவனம் பெறும் 50 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தில் ஒருபகுதியை பெற்று, அதனை நடுத்தர மக்களின் நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (07) புதன்கிழமை இடம்பெற்ற 'சர்வஜன நீதி' ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர்மேலும்குறிப்பிட்டதாவது,
நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் நேரடி வரி அறவிடலினால் நடுத்தர மக்கள்பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
நாட்டில் சிகரெட் விற்பனை விலைக்கும், சிகரெட் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.
பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பிற்கான வரைபுகளை தயாரிக்கும் அரசாங்கம் சிகரெட் நிறுவனத்திடமிருந்து முறையாக வரி அறவிட நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுக்கவில்லை.
ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சிகரெட் நிறுவனத்திற்கு பல்வேறு வழிமுறையில் வரி விலக்கு வழங்கியுள்ளன.
2000 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிகரெட் ஒன்றின் விற்பனை விலைக்கும், நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் வரிக்கும் இடையில் சமனிலை தன்மையை பேணியது, பிற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் சிகரெட் நிறுவனங்களுக்க சார்பாகவே செயற்பட்டது.
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சிகரெட் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் 2021ம் ஆண்டு வரி விதிப்புக்கு முன்னர் பல பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வருடம் மாத்திரம் 40 முதல் 50 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஆனால் சிகரெட் உற்பத்திக்கான வரி விலக்கு 50 சதவீதத்தால் வழங்கப்பட்டது.
ஆகவே நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் பெறும் வருமானத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் பெற்று அதனை நடுத்தர மக்களின் நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் உள்வாங்கப்பட வேண்டும்என்பதை நிதியமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.
