பெக்கோ சமனுக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபா
பெறுமதிமிக்க 2 சொகுசு பேருந்துகள் பொலிஸ் குற்றவரும்படிகள் விசாரணைப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.கடந்த ஒகஸ்ட் 30 ஆம் திகதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான பெக்கோ சமன் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பெக்கோ சமனுக்கு சொந்தமானது என கண்டறியப்பட்ட 2 சொகுசு பேருந்துகள் பொலிஸ் குற்றவருவாய் விசாரணைப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பேருந்துகள் சுமார் 8 கோடி ரூபா பெறுமதி மிக்கது எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளியான பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபருக்கு எதிரான வழக்கு விசாரணை புதன்கிழமை (22) கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம தலைமையில விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். சந்தேகநபரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.
போதைப்பொருள் சட்டத்தின் 54 ஆம் உப பிரிவு மற்றும் பண சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்துக்கமைய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமை மற்றும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண சுத்திகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாக பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் வைத்து பெக்கோ சமன் உள்ளிட்ட குழுவினருடன் ஷாதிகா லக்ஷாயும் கைதுசெய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
