Our Feeds


Friday, October 24, 2025

Sri Lanka

மக்கள் நேய நிர்வாகத்திலேயே போதைப்பொருள் ஒழிப்பு சாத்தியம் - கஜேந்திரகுமார்!


மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் போதைப்பொருள் பூச்சிய பாவனையில் இருந்தது. அவர்கள் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இயங்கியதால் இது சாத்தியமானது.

இந்த காலப்பகுதியில் வடக்கில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் இருந்தமையினால் அங்கு போதை அச்சுறுத்தல் குறைந்த அளவிலேயே இருந்தது.

எவ்வாறாயினும், போர் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே வடக்கில் பாரியளவில் போதைப்பொருள் பரவல் தொடங்கியுள்ளது.

இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று சில பகுதிகளில் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக இராணுவ முகாம் மாறியுள்ளது.

விடுதலைப்புலிகளின் புரட்சியை தோற்கடிப்பதற்கு இராணுவத்தின் ஊடாக பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளையும் காவல்நிலையங்கள் ஏற்க மறுகின்றன.

எனவே, போதைப்பொருள் பரவலில் இராணுவத்துக்கு உள்ள தொடர்பு குறித்த தேடிப்பார்க்க வேண்டும்.

காவல்துறை, கல்வி, சுகாதார போன்ற சமூகத்துக்கு மிகவும் தேவைப்படும் விடயத்தை அந்ததந்த மக்களிடமே விடவேண்டும். அப்போதுதான் தங்களது மக்களுக்கு தாம் பொறுப்பானர்கள் என்ற உணர்வு ஏற்படும்.

மாறாக, வடக்கு கிழக்குடன் எவ்வித தொடர்பல்லாத தரப்பினரால் அங்குள்ள பிரச்சினைகளை ஒருபோதும் தீரக்கமுடியாது எனவும் கடந்த காலங்களில் இத்தகைய தரப்பினரின் செயற்பாட்டாலேயே வட மாகாணம் திட்டமிட்ட வகையில் கல்வி உள்ளிட்ட விடயங்களில் பின்தள்ளப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

எனவே, அரசாங்கம் எடுக்கும் போதைப்பொருள் ஒழிப்புக்கு தேசிய வேலைத்திட்டத்துக்கு தங்களால் பூரண ஆதரவு வழங்கப்படும்.

எனினும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதாயின் இந்த செயற்பாட்டிலிருந்து இராணுவத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நிபுணத்துவம் பெற்றவர்களை மாத்திரம் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தினால் மாத்திரமே போதைப்பொருள் ஒழிப்பு என்பது சாத்தியப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அதேநேரம், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மாறாக போதைப்பொருளை விற்பவர்களே தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »