Our Feeds


Tuesday, March 17, 2026

Zameera

எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் வைத்தியசாலை கட்டமைப்பை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது


 எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, வருங்காலத்தில் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரித்துச் செல்வதில் கடும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 


சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான தீர்வை தற்போதைய முறைமைக்குள் விரைவாக வழங்க வேண்டும் என அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


இது தொடர்பாகத் தலையீடு செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கும் அந்தச் சங்கத்தினால் எழுத்துப்பூர்வமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும், இதுவரை சுகாதார அமைச்சு உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினர் எவரும் இந்தப் பிரச்சினை குறித்து எந்தவிதக் கவனமும் செலுத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 


இதற்கமைய, நிலவும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நாளை (17) நடைபெறவுள்ளது. 


ஆரம்ப சுகாதார சேவையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுடனான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகளின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையும் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 


இவை அனைத்தையும் மீளாய்வு செய்து, எதிர்காலத் திட்டங்கள் குறித்த பல தீர்க்கமான முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்றும் அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »