அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவத்தால் நாடு பாரிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுமானால் இவ்வாறானதொரு கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது எனக் கூறிய போதிலும், தற்போது எரிபொருளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முற்படுவது அவர்களின் முரண்பாடான நிலைப்பாட்டையே காட்டுகிறது.
இந்த QR முறையினால் சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி மற்றும் சிற்றுண்டிச்சாலை தொழில்கள் வீழ்ச்சியடைவதுடன், சாதாரண பொதுமக்கள் தமது தங்க ஆபரணங்களை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கையின் வெளிநாட்டு வருமான வழிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் எரிபொருள் மீதான வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரை எரிசக்தி அமைச்சராக நியமித்துள்ளமை குறித்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மௌனம் காப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
