Our Feeds


Thursday, April 30, 2026

Zameera

எதிர்க்கட்சியின் சதிகளை தோற்கடிக்க நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சரோஜா சாவித்திரி போல்ராஜ்

எதிர்க்கட்சி தலைமையிலான தரப்பினர் அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளைத் தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

உலகின் யுத்த நெருக்கடிக்கு மத்தியிலும் எரிபொருள் உட்பட தேசிய பொருளாதாரத்திற்கு சிறு அழுத்தம் கூட ஏற்படாத வகையில் அனைத்தையும் முகாமைத்துவம் செய்து அதன் பிரதிபலனை அரசாங்கம் மக்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மே தினக் கூட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று நேற்றைய தினம் பெலவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு விளக்கமளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உழைக்கும் தொழிலாளர்களின் நலனில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இம்முறை மே தினத்தில் பெண்களுக்கு பாரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மே தினக் கூட்டங்களில் தமிழ்,சிங்களம், முஸ்லிம், மலே என அனைத்து இன,மத பெண்களையும் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

தற்போதைய அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்று ஒன்றரை வருட காலத்தில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதுடன் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளிலிருந்து அனைத்து துறைகளிலும் பணிபுரியும் சகோதர சகோதரிகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களின் அரசாங்கத்தை பாதுகாக்க மக்களின் தலையீட்டை உறுதிப்படுத்தி முன்னோக்கிச் செல்லும் வாய்ப்பை இம்முறை மே தினம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »