அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்திருப்பது இந்த நாட்டு விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
அரிசியை இறக்குமதி செய்யப்போவதில்லை எனக் கூறிய அரசாங்கம், 2025 ஆம் ஆண்டில் 67,000 தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது ஒரு தனி இறக்குமதியாளருக்கு மாத்திரம் 1040 தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறைக்குத் தேவையான அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்வதே முறையானது.
சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருகின்றது.
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது போல, அரிசி இறக்குமதி மூலமும் நஷ்டத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயல்கிறது.
1994 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 வீதமாக இருந்த விவசாயிகளின் வருமானம், இன்று 7 வீதம் வரை குறைந்துள்ளது.
விவசாயிகள் இன்று ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிறு போகத்திற்குத் தேவையான யூரியா உரத்தில் ஒரு இலட்சம் தொன் தட்டுப்பாடு நிலவுகிறது.
மத்திய கிழக்கு போர் சூழலுக்கு முன்னதாக இந்த உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறியதால் விவசாயிகள் இன்று நிர்க்கதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
