களுத்துறை, வெட்டுமகட, பள்ளிவாசல் வீதிப்
பகுதியில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூட்டை நடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் போதே இந்த அங்கீகரிக்கப்பட்ட கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பயாகல, மெஹிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சம்பத் குமாரதுங்க எனப்படும் 'போஞ்சியா' என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள சிசிரிவி கமராவினை ஆய்வு செய்ததன் பின்னர் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த போதே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சந்தேகநபர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்தமை தொடர்பாகப் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான துப்பாக்கிதாரி இன்று (03) புதன்கிழமை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
