பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எனினும், இது குறித்து உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
"உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இது குறித்து சில தகவல்கள் இருந்தன. இது தொடர்பாக பொலிஸாரும், குறிப்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் அவதானத்துடன் இருக்கின்றனர். வரும் காலத்தில் இந்த போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிவப்பு மற்றும் நீல நிற நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டமை குறித்து டுபாய் அரசிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பரிமாறப்பட்டன. எவ்வாறாயினும், சர்வதேச பொலிஸார் ஊடாக இது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அவர் எத்தகைய நபராக இருந்தாலும், அவரை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்." என்றார்.
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதன் காரணமாக, இவர் அமெரிக்காவினால் கூட தேடப்பட்டு வரும் ஒரு நபராவார் எனக் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாக இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் பிரதான 5 கடத்தல்காரர்களில் ஷிரான் பாசிக்கும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
