சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி படைப் பிரிவினர் நடத்தியுள்ள பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
அபா பகுதி சவுதி அரேபியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், யேமன் எல்லைக்கு அருகில் உள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகராகவும் விளங்கும் நிலையில், இத்தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து சவுதி அரேபியா அண்மையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அபா விமான நிலையம் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி படைப் பிரிவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2022 மார்ச் மாதம் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹவுதிகள் நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. அதன் பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஹவுதி அமைப்பினர் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத நிலையில், அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும்.
இதன் மூலம் இரு தரப்பிற்கும் இடையே நிலவி வந்த நான்கு வருட கால அமைதி உடன்பாடு அதிகாரப்பூர்வமாக முறிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
