Our Feeds


Thursday, July 9, 2026

SHAHNI RAMEES

நீர்கொழும்பு சிறையில் கைதிகளை தடுத்து வைக்காதிருக்க தீர்மானம்!

 

கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்த வளாகத்திற்குள் கைதிகளைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது எனச் சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறைச்சாலை வளாகம் ஒரு குற்ற பிரதேசமாக கருதப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. 

அத்துடன், விசாரணை அதிகாரிகளுக்குக் அதில் பாதுகாப்பாகத் தங்களது புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்கவும், கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தை புனரமைக்கும் பணிகளை விரைவாக ஆரம்பிக்கவும் ஏதுவாக, இந்த வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பாலானோர் வேறு சிறைச்சாலைகளுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர். 

தற்போது இயங்கி வரும் சிறைச்சாலைகளில் நிலவும் கைதிகளின் நெருக்கடி நிலை மற்றும் அவர்களின் நலன்புரிச் சேவைகளைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள சிறைச்சாலைகளுக்கு மேலதிகமாக, தற்காலிக அடிப்படையில் வேறு பொருத்தமான வளாகங்களுக்குக் கைதிகளில் ஒரு பகுதியினரை இடமாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன் காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, தற்காலிக அடிப்படையில் "மஹமோதர" மற்றும் "பழைய போகம்பரை" வளாகங்களைச் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கமைய சிறைச்சாலைகளாக நிறுவுவதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »