Our Feeds


Sunday, August 30, 2026

ShortNews

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் - சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் - ஹர்ஷன நாணயக்கார!


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்று அரசியல்வாதிகள் குறிப்பிட முடியாது. உயர்நீதிமன்றமே அந்த தீர்மானத்தை அறிவிக்க வேண்டும். நீதிமன்றம் அவ்வாறு அறிவிப்பு விடுத்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல தயார். நீதிமன்ற தீர்ப்பு அப்பாற்பட்டு எம்மால் செயற்பட  முடியாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை(29)  நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் சகல தீர்மானங்களையும், செயற்பாடுகளையும் எதிர்க்கும் நிலைப்பாட்டில் தான் எதிர்க்கட்சியினர் உள்ளார்கள்.சகலதையும் எதிர்க்கும் இவர்களின் நோக்கத்துக்கு அமைய எம்மால் செயற்பட முடியாது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்களின் நலனுக்காகவும், நீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைப்புக்காகவும் கொண்டு வரப்பட்டது.ஆகவே இந்த திருத்தத்தால் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கும்,பாதுகாப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பிரதம நீதியரசர் மீது எதிர்க்கட்சியினர் வெறுப்புக் கொண்டுள்ளார்கள்.அதனால் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இவர்களின்  எதிர்ப்புக்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் எதிர்க்கட்சியின் பலரது உண்மை முகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.ஆகவே சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்கத்தில் எதனையும் தீர்மானிக்க முடியாது.

பாராளுமன்ற பெரும்பான்மையுடன், மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தால், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல தயார். நீதிமன்றத் தீர்ப்பு அப்பாற்பட்டு எம்மால் செயற்பட முடியாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »