இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசியக் கொடி குறித்து நான் கூறியதாக முற்றுமுழுதான பொய்ப் பிரசாரமொன்றை ஒரு குழுவினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இனங்களுக்கிடையே சீர்குலைவை ஏற்படுத்தவும், தீவிர இனவாத மோதல்களைத் தூண்டுவதையுமே நோக்கமாகக் கொண்டு இந்தச் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சிறப்பு விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய பொய்ப் பதிவுகளைத் தெரிந்தே சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்கள் அல்லது பதிவேற்றியவர்கள் பற்றிய விவரங்கள், காணொளிகள் அல்லது வேறு ஆதாரங்கள் இருப்பின் அவற்றை உடனடியாக எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை நாட்டின் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் அரசாங்கம் மிகவும் உறுதியாக உள்ளது. எனவே, இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகப் பொலிஸார் மூலம் தட்டையின்றிக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
