(எம்.மனோசித்ரா)
எல் நினோ மற்றும் லா நினோ காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய மிகக் கடுமையான இயற்கை சீற்றங்கள் குறித்து எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இத்தகைய பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் நாட்டைத் தயார்ப்படுத்துவது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் கூட்டுப் பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நேபாளம் மற்றும் சீனா - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பனிச்சரிவு மற்றும் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதுடன் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். எவரும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த இயற்கை விபரீதத்தை ஒரு முக்கிய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
உலகளாவிய ரீதியில் ஏற்படும் எல் நினோ மற்றும் லாநினோ காலநிலைக் மாற்றங்களின் விளைவாக, இலங்கையின் ஒரு பகுதியில் மிகக் கடுமையான வறட்சியும், மற்றொரு காலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பாரிய பிரச்சினைகளும் ஏற்படக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இத்தகைய ஆபத்தான சூழ்நிலைகள் குறித்து நாட்டின் அனைத்துக் மக்களும் தெளிவான விழிப்புணர்வையும் கல்வியையும் பெற வேண்டியது அவசியமாகும்.பயண வழிகாட்டிகளைப் படி
எனவே, இந்த எல் நினோ மற்றும் லாநினோ தாக்கங்களில் இருந்து நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கும், அதன் எதிர்மறையான பாதிப்புகளைக் குறைப்பதற்கும், இத்தகைய பயங்கர இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடிய திறன்மிக்க நாடாக இலங்கையை உருவாக்குவதற்கும் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியாக இருக்கும் நமக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றார்.
