Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

ஐ.எஸ் கொள்கையை இலங்கைக்குள் கொண்டுவந்து ஸஹ்ரான் அணியினரை பயங்கரவாதத்துக்குள் இணைத்தவர் நௌபர் மௌலவி! அமைச்சர் சரத் வீரசேகர

 



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் முன்னிறுத்தினால் இவர்களுக்காக முன்வந்து வாதாடும் சிறந்த சட்டத்தரணிகள் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவிடுவார்கள்.


அவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்ற காரணத்தினாலே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக இன்னனும் வழக்கு தொடராது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எப்.பி.ஐ மற்றும் ஒஸ்ட்ரேலியன் பெரடல் பொலிஸ் ஆகிய சர்வதேச விசாரணை பிரிவுகளுடன் எமது குற்றப் புலனாய்வு பிரிவு இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19)  புதன்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மூலமாக முன்வைக்கப்பட்ட அமைச்சின் விசேட அறிவிப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். இதன்போது குறைபாடுகள் இருப்பதாகவும், வழக்குகள் தொடுக்க முடியாத காரணிகள் குறித்தும் அறிவித்திருந்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

அதேபோல் இந்தத் தாக்குதலின் பின்னணியில் சூழ்சிகள் உள்ளதாகவும், பிரதான சூத்திரதாரி குறித்த தெளிவுகள் இல்லை எனவும், சர்வதேச நபர்கள் குறித்த தகவல்கள் தெளிவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பேராயரும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவை குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் பதில் கூற வேண்டியுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த நாட்டில் முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம், அவ்வாறு இருக்கையில் நாம் மீண்டும் நாட்டில் பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்.

எவ்வாறிருப்பினும் ஈஸ்டர் தாக்குதலில் எமது நாட்டு பொதுமக்களை போலவே சர்வதேச நபர்களும் கொல்லப்பட்டனர். எனவே இது குறித்த சர்வதேச மட்டத்திலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எப்.பி.ஐ மற்றும் ஒஸ்ட்ரேலியன் பெரடல் பொலிஸ் ஆகிய சர்வதேச விசாரணை பிரிவுகளுடன் எமது குற்றப்புலனாய்வு பிரிவு இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

சர்வதேச விசாரணை செயற்பாடுகளுக்கு நீண்ட காலம் எடுக்கும். உதாரணமாக கூறுவதென்றால் 2001 அமெரிக்க தாக்குதலுடன் தொடர்புபட்ட கலீத் என்ற நபர் இன்னமும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, வழக்குகள் கூட இன்னமும் தொடுக்கப்படவில்லை.

ராஜீவ் காந்தி கொலை, லக்ஷமன் கதிர்காமர் கொலைகள், தலதாமாளிகை தாக்குதல்தாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரவும் நீண்டகாலம் எடுத்தது.

எவ்வாறு இருப்பினும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 32 பேருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன, மாவனெல்லை புத்த சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட 16 பேருக்கு கேகாலை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வண்ணாத்துவில்லு லக்டோ தோட்டத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 சந்தேக நபர்களுக்கு புத்தளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றத்தில் சந்தேக நபர்கள் மூவருக்கு கேகாலை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு அனுசரணை வழங்கிய குற்றத்தில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட மேலும் சிலருக்கும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளோம், அதேபோல் தனிப்பட்ட முறையில் சட்டமா அதிபரை சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தேன். எவ்வாறிருப்பினும் பொலிஸாரின் சாட்சியங்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதன் காரணத்தினால் முழுமையாக அறிக்கை கிடைக்கும் வரையில் பொறுமை காக்கவேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளில் சாட்சியங்கள் மாறுபடுகின்றமை மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதும் வழமையே. ஆகவே இது குறித்த செயற்பாடுகளை குறைபாடுகள் இன்றி முழுமைப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும் எமது புலனாய்வுத்துறை விசாரணைகளின்போதும் அமெரிக்காவின் விசாரணைகளின்போதும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான பாத்திரம் நௌபர் மௌலவி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ் கொள்கையை இலங்கைக்குள் கொண்டு வந்து ஸஹ்ரான் மற்றும் அவரது அணியினரை பயங்கரவாதத்துக்குள் கொண்டுவந்துள்ளார்.

இது குறித்த பல்வேறு சாட்சியங்கள் எம்மிடமும், எப்.பி.ஐயிடமும் உள்ளது. அதேபோல் இந்த தாக்குதலுடன் சர்வதேச நபர்களும் தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எவ்வாறு இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் சகலரும் பொறுப்புக்கூற வேண்டும்.

அதேபோல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மூலமாக முன்னெடுக்கப்பட்ட ‘சேவ் த பேர்ல்’ என்ற அமைப்பின் மூலமாக நௌபர் மௌலவி மற்றும் ஸஹ்ரான ஆகியோர் சிறுவர்களுக்கு அடிப்படைவாத போதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனவே இவர்களுக்கு உடனடியாக வழக்கு தொடுத்தால் குறித்த குற்றவாளிகளுக்காக முன்வரும் சிறந்த சட்டத்தரணிகள் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். எனவேதான் எந்தவொரு தவறுகளையும் செய்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் நாம் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடராது சாட்சியங்களை பலப்படுத்தும் வேலையை செய்து வருகின்றோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »