Our Feeds


Saturday, August 29, 2026

Zameera

நேபாள வெள்ளம்: இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு


 நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 


நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 


நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாகவே இச்சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 


வியாழக்கிழமையன்று மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அங்கிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


இச்சடலங்கள் யாருடையவை என்பதை அடையாளம் காண்பதற்காக அதிகாரிகள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த வெள்ளப் பேரழிவினால் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியம் முழுவதும் 2,400 க்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ளனர். 


இந்தியாவில் மீட்கப்பட்ட இந்த ஏழு சடலங்களும் இதுவரை உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »