Our Feeds


Friday, August 28, 2026

ShortNews

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 547 சடலங்கள் மீட்பு!


இமாலய மலைத்தொடரின் நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த 547 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்நாட்டின் தேசிய அனர்த்த இடர் குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரசபையின் தரவுகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டனர்.

வெளிநாட்டினர் 517 பேர் உட்பட 977 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ShortNews

ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு பாகிஸ்தான் இணங்காது - பாகிஸ்தான் அரசு அதிரடி!


வியாழக்கிழமை இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்தராப், தெஹ்ரான் மீதான வாஷிங்டனின் ஒருதலைப்பட்சமான தடைகள் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்றும், பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் நம்புவதாகக் கூறினார்.

ShortNews

அமெரிக்க தடைக்குள்ளான ஈரானின் 11 கப்பல்கள் இலங்கைக்கு அருகில்!




அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானின் 46 எண்ணைக் கப்பல்களில் 11  எண்ணெய்க் கப்பல்கள் அடங்கிய குழு, இலங்கையின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள நிலையில் இலங்கையின் கடல்சார் அதிகாரிகள் கண்காணித்து வருவதாகத் அல்-அரபிய்யா செய்தி வெளியிட்டுள்ளது.
Zameera

முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கிடம் கோடிக்கணக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை


 இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, கோடிக்கணக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாசிக் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.




இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இரு அமைச்சர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகளும் இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




இந்த 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது அவ்வப்போது ஷிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




மேலும், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த முக்கிய அமைச்சரொருவர், ஷிரான் பாசிக்குக்கு அனுமதியற்ற முறையில் காணிகளை நிரப்பி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




அந்த நடவடிக்கைகளுக்காக முன்னாள் அமைச்சர், ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருமளவு பணத்தைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.




ஷிரான் பாசிக் நீண்ட காலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவிக்கையில், ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.




தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது

Zameera

வெள்ளத்தில் சிக்கிய இரட்டைக் குழந்தைகள் மீட்பு


 நேபாளத்தில் ஏற்பட்ட அசுரத்தனமான பெருவெள்ளத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இச்சூழலில், வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த இரட்டைக் குழந்தைகளை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


ஆகஸ்ட் 26ஆம் திகதி இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த மண்சரிவு மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் இதுவரை 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினரும் இராணுவத்தினரும் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ShortNews

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கப் புதிய அதிகாரசபை!


மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயா புரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய மலைநாட்டை பழைய நிலைக்குக் கொண்டுவர பல தசாப்தங்கள் ஆகலாம் என்றபோதிலும், இடம்பெற்று வரும் அழிவுகளைத் தடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய மலைநாடு இலங்கையின் இதயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது கண்முன்னே அழிந்து வருவதாகவும்; மலை சரிவுகள், நீரூற்றுகள் வற்றுதல், ஆறுகள் மற்றும் ஓடைகள் தூர்ந்துபோதல் என்பவற்றை நாம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய, இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபைக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

"நமது நாட்டின் எதிர்காலத்தின் முக்கிய பகுதி மத்திய மலைநாட்டிலேயே தங்கியுள்ளது. நமது எதிர்காலத்திற்காக மத்திய சூழலைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் போது வீடுகளை இழக்க நேரிடலாம். சாகுபடி நிலங்கள் காடுகளாக மாறக்கூடும். ஆனால் அதைச் செய்தாக வேண்டும், இல்லையெனில் நாம் பெரும் பேரழிவை எதிர்கொள்ள வேண்டி வரும்.

நிறுவனங்களின் அதிகாரங்கள் பிரியலாம், பதவிகள் மாறலாம்... யாரும் கலங்க வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மலையக மக்கள் நமது சொந்த சகோதரர்களாக நாட்டில் வாழ்வதற்கு முழு உரிமையையும் வாழ்க்கையையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் ஒரு கட்டமாக தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையும் போது, அம்மக்களின் உரிமைகள் பாதுகாப்பக்கப்படும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

"காணி தொடர்பாக பெரும் பிரச்சினை உள்ளது. தோட்டத்தில் வேலை செய்தாலும் நிறுவனங்கள் இலகுவில் காணிகளை வழங்க விரும்புவதில்லை. ஆனால் இந்த நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையவுள்ளன. ஏற்கனவே அது தொடர்பான அமைச்சு அந்த ஒப்பந்தங்கள் குறித்து மறுஆய்வு செய்ய குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

நாங்கள் மிக விரைவில் அந்த ஒப்பந்தங்களை முடிக்க எதிர்பார்க்கிறோம். அதில் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சரத்துக்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யுத்த காலத்தில் இலங்கையை விட்டு இந்தியாவிற்கு சென்ற மக்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலையக மக்கள் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

"தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு அனைத்து மக்கள் குழுக்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாகும். அதற்காக பல வீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மக்களுக்கு நல்ல வருமான வழி தேவை. அதை பூர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது போதுமானதாக இல்லாவிட்டாலும், முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிள்ளைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நூற்றாண்டுகளாக இந்த சமூகம் வாழ்ந்த வாழ்க்கையை தங்கள் பிள்ளைகளுக்கு உரிமையாக்குவது நியாயமானது அல்ல.

தோட்டத்தில் பிறக்கிறார்கள், தோட்டத்தில் வேலை செய்கிறார்கள், தோட்டத்தில் இறக்கிறார்கள், தோட்டத்தில் மண்ணாகிறார்கள். அந்த வாழ்க்கையிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டும். அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வருவதற்கு மிக முக்கியமான காரணி கல்வி.

அதேபோல் ஆரோக்கியமான வாழ்விற்காக நல்ல சுகாதார வசதிகள் வழங்கப்படும். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் இந்த மலையக மக்களிலேயே அதிகமாக உள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எங்கிருக்கிறார்கள், ஆயுட்காலம் குறைந்த சமூகம் எங்குள்ளது... அது இந்த மக்களுக்கு இடையேதான்.

எனவே, இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒதுக்கி வைக்கப்பட்ட, ஏறெடுத்தும் பார்க்காத ஆட்சிகளால் இந்த மக்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்" என்றும் தெரிவித்தார்.

ShortNews

ஜனாதிபதியின் முற்றிலும் தவறான நிலைப்பாட்டில் உள்ளார் - சம்பிக்க ரணவக்க!


அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இந்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் எவருக்காகவும் தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை என்று குறிப்பிடுவது நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட தயார் என்று ஜனாதிபதி மறைமுகமாக குறிப்பிடுவது வெளிப்படுகிறது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நிலைப்பாட்டை நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இந்த தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்விதமான விரிவான கலந்துரையாடல்களும் இல்லாமல் நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. தீர்மானத்தை மீள் பரிசீலிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அவ்வாறாயின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் குறுகிய தரப்பினரா,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இந்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் எவருக்காகவும் தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை என்று குறிப்பிடுவது நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட தயார் என்று ஜனாதிபதி மறைமுகமாக குறிப்பிடுவது வெளிப்படுகிறது.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு சாதகமாக அமையுமே தவிர நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. நீதித்துறை அரசியல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நீதித்துறையை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது இது முற்றிலும் தவறானது என்றார்.

ShortNews

விடுமுறை நாட்களில் அதிவேக வீதியால் கொட்டிய வருமானம்!


கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக வீதி அமைப்பிலும் பயணித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 325,316 ஆகும்.

ஓகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் ஈட்டப்பட்ட வருமானம் 60,409,995 ரூபாயாகும்.

ஓகஸ்ட் 27 ஆம் திகதி அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 161,553 ஆகும். அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களில் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட வீதி (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளது.

ShortNews

நேபாள வெள்ளப்பெருக்கில் சுரங்கப்பாதையில் சிக்கிய 100 தொழிலாளர்கள்!


இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கினால் வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

Zameera

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்டச் சிக்கல் – அமைச்சர் ஆனந்த விஜேபால


 (இராஜதுரை ஹஷான்)



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஏனெனில் அவர் சிங்கப்பூர் நாட்டு பிரஜை. மாற்று சட்ட வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் முக்கிய தரப்பினரை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.


39 நாடுகளில் தலைமறைவாகியுள்ள பிரதான குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் பிரதான குற்றவாளி ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்.



பிணைமுறி மோசடியின் குற்றவாளியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஏனெனில் அவர் சிங்கப்பூர் நாட்டு பிரஜை.தற்போது அவர் இலங்கை பிரஜையல்ல, ஆகவே சிங்கப்பூர் நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டு பிரஜையை எம்மால் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது.மாற்று சட்ட வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.தீவுகளை சுற்றிப்பார்த்தல்


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் 22ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக மேல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான புலனாய்வு தகவல்கள் கிடைத்தும், அரசியல் நோக்கத்துக்காக தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பாதாளக்குழுக்களின் முக்கிய தரப்பினரை நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னர் அவர்களிடம் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைவதை அவதானிக்க முடிகிறது.


ஊழல் மற்றும் படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலமளிக்க வந்து வெளியேறியதன் பின்னரே அவர்கள் வழமைக்கு மாறாக அரசாங்கத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள். ஏனெனில் விசாரணைகளின் பின்னர் அடுத்து என்ன நேரிடும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

Zameera

நேபாள வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு


 நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இமயமலைப் பகுதியில் பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாகவே இந்த அதிதீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உருவான பெருவெள்ளமும் சேறும், எல்லைப் பகுதியில் உள்ள பல கிராமங்களையும் பாலங்களையும் முற்றிலுமாக அடித்துச் சென்றுள்ளன.

திபெத் எல்லைப் பகுதியிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், சீனத் தரப்பில் 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 472 ஆக உயர்ந்திருக்கிறது.

திபெத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புதிதாகத் தற்காலிகத் தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது.

இதில் சுமார் 30 இலட்சம் கன மீட்டர் நீர் தேங்கும் அபாயம் உள்ளதால், சீனா கீழ்நிலைப் பகுதிகளுக்கு 'Level-IV' எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போன நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் யாத்ரீகர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக நேபாள இராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Zameera

‘கெஹெல்பத்தர பத்மே’ பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்


 தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றத்தால் எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட, பாதாள உலகக்குழுவின் முக்கிய புள்ளி என அறியப்படும் கோரளகமகே மந்தினு பத்மசிரி பெரேரா எனும் 'கெஹெல்பத்தர பத்மே' அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பூஸா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.



கொழும்பு நீதிவான்  நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வெலிசர சிறைச்சாலையில் சந்தேகநபரின்  எதிர் தரப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், அவரை பாதுகாப்பு நிமித்தம் வெலிசர தவிர்ந்த வேறு எந்தவொரு சிறைச்சாலையிலாவது தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.பயண வழிகாட்டிகளை வாசித்தல்


சட்டத்தரணி முன்வைத்த விடயத்தை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை மிகவும் பாதுகாப்பான பொருத்தமான சிறைச்சாலையொன்றில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபரை பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசென்று தடுத்து வைப்பதற்கு  சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

Zameera

நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான பிரச்சினைகள் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே தீர்க்கப்பட வேண்டும்


 (நா.தனுஜா



நீதிபதிகள் மற்றும் நீதித்துறை தொடர்பான கரிசனைகள் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வ நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முறையற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என எச்சரித்துள்ளது.


அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் தொடர்பில் ஏற்கனவே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் வியாழக்கிழமை (27) அச்சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:


பொது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு கட்டமைப்பையும் போலவே நீதித்துறையும் சட்டபூர்வமான பரிசீலனைக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கள், நீதிபதிகளின் நடத்தை மற்றும் நீதி நிர்வாகம் என்பன உண்மையின் அடிப்படையிலும், நியாயமான மற்றும் பொறுப்பான முறையிலும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படலாம்.


எந்தவொரு நீதிபதிக்கும் எதிரான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நியாயமான முறையில், உரிய சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, பொருத்தமான அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் ஊடாக வெளியக ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.



அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்துவம் மற்றும் பொதுமக்களின் உரிமைகள் தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கும் பின்னணியில், அதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவுக்குவரும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காகவே இந்தத் திருத்தம் அவசரமாகக் கொண்டுவரப்படுவதாகப் பரவலான கருத்துக்கள் உள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்திலும், சமூகவலைத்தளங்களிலும் முன்வைக்கப்படும் நீதித்துறை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பொறுப்புடன் கையாளப்படும் அதேவேளை, முறையற்ற விதத்தில் நிகழ்த்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.