Our Feeds


Friday, October 9, 2026

SHAHNI RAMEES

"அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணம்!" – முன்னாள் நீதவான் திலின கமகே பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம்!

 


Zameera

காலி துறைமுகத்தில் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்புப் பயிற்சி வெற்றிகரமாக முன்னெடுப்பு

 

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு (ISPS) பயிற்சி நேற்று (08) வியாழக்கிழமை காலி துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 


இதன்படி, இந்தப் பயிற்சியின் போது அனுமதியற்ற நபர்கள் சட்டவிரோதமாக துறைமுக வளாகத்திற்குள் நுழைவதைத் தடுப்பது, அவ்வாறான சம்பவங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது, இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், அத்துடன் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதற்கு விரைவானதும் ஒருங்கிணைந்ததுமான பதிலளிப்பை மேற்கொள்வது தொடர்பான நடைமுறைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதுடன், இந்தப் பயிற்சியின் மூலம் காலி துறைமுகத்தின் பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் இடையிலான நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, அவசரநிலையின் போது விரைவாகப் பதிலளிக்கும் திறன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறையில் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றை வலுப்படுத்த முடிந்தது. 


சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு விதிமுறையின் (ISPS Code) நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்கு இணங்க, காலி துறைமுகத்தின் பாதுகாப்புத் தயார்நிலையைப் பேணுவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் இந்தப் பயிற்சி கருதப்படுகின்றது. 


இதேவேளை, தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் தீயணைப்பு பிரிவு, இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவு மற்றும் இலங்கை கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு ஆகியன இப்பயிற்சிக்கு செயற்பாட்டு ஆலோசனைப் பங்களிப்பையும் பங்கேற்பையும் வழங்கின.


அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிஸின் துறைமுகப் பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

Zameera

தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

 


கைது செய்யப்பட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ,  இன்று (09) வெள்ளிக்கிழமை தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.



கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமையினால் நேற்று (08) புதன்கிழமை சிறைச்சாலை வைத்திய நிபுணரிடம் அவர் காண்பிக்கப்பட்டார்.


சிறைச்சாலை மருத்துவ அதிகாரி வழங்கிய மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைவாகவே, தேசிய கண் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் ஒருவரிடம் அவரைப் பரிசோதனைக்குட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 10 மில்லியன் ரூபா நிதி முறைகேடு குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்‌ஷ, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHAHNI RAMEES

ஹூதிகள் அட்டாக் - ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம்!

 


சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான தனது

Zameera

ஐந்து மாவட்ட செயலகங்களில் மோட்டார் சைக்கிள் பதிவு சேவைகள் ஆரம்பம்!

 

ஐந்து மாவட்ட செயலகங்களில் எதிர்வரும்  திங்கட்கிழமை (19) முதல் மோட்டார் சைக்கிள் பதிவு சேவைகள் புதிதாக தொடங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களிலேயே இந்த புதிய வசதிகள் கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாவட்ட அளவில் இயங்கும் இந்த அலுவலகங்களின் ஊடாக மோட்டார் சைக்கிள் பதிவு செய்யும் சேவைகளுக்கான அணுகலை விரிவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Zameera

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் அல்ல – பிமல் ரத்நாயக்க

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)



எவரையும் பழிவாங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை. நாங்கள் அவ்வாறு  நினைக்கவுமில்லை. அவ்வாறு நினைத்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும். மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள். ஒன்று நாங்கள் மீண்டும் வருவோம். அல்லது எங்களை விட சிறந்த தரப்பினர் ஆட்சிக்கு வருவார்கள். மஹிந்த மற்றும் ரணில் ஆட்சியில் ஊழலுக்குப் பழக்கப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்கள். இதில் எமது தலையீடு ஏதும் இல்லை. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அமையவே தற்போது கைதுகள் இடம்பெறுகின்றன என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அரசியல் பழிவாங்கல் அல்ல. அது அரச நிர்வாக கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதற்காகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையையே கடுமையாக செயற்படுத்துகிறோம். இதில் எவ்வித தவறும் கிடையாது.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தை வலுப்படுத்துவதற்காகவும், நடைமுறையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அரச நிறுவனங்களின் வருவாய் கிடைப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


வரி செலுத்தல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் கடுமையான செயற்பாடுகளின் ஊடாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.


சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தில் எவருக்கும்  சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. ஊழல்வாதிகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. உலகில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து தான் பொருளாதாரம் மற்றும்  சமூக கட்டமைப்பில் முன்னேற்றமடைந்துள்ளன. அவ்வாறான நடவடிக்கைகளை இங்கு முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகளும், எதிர்க்கட்சிகளும் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுகிறார்கள்.


ஊழலற்ற அரச நிர்வாகம் வேண்டும், பலமான  பொலிஸ் சேவை வேண்டும் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கிறார்கள். ஊழல்வாதிகள் கைது செய்யப்படும்போது அவர்களை கொண்டாடுகிறார்கள். இது முற்றிலும் கீழ்த்தரமானதொரு செயற்பாடாகும். எதிர்க்கட்சியினர் ஊழலுக்கு எதிர்ப்பு, ஆனால் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகிறார்கள்.



நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதிதாக எவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. தற்போதைய கைதுகள் 2015ஆம் ஆண்டுக்கு பின்னரே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் பிற்பட்ட காலத்தில் எடுக்கப்படவில்லை. டீல் செய்து வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொண்டார்கள். அந்த நிலைமை தற்போது கிடையாது என்பதால் சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறுகின்றன. அதனால்தான் அரசியல்  பழிவாங்கல் என்று குறிப்பிடுகிறார்கள்.


ராஜபக்ஷ குடும்பத்துக்கு இல்லாத வழக்குகள் ஏதும் இல்லை. இந்த வழக்குகள் அனைத்தும் 2015ஆம் ஆண்டுக்கு பின்னரே தாக்கல் செய்யப்பட்டது. இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், பல வழக்குகள் உள்ளன. சகல மோசடிகளிலும் ஏதாவதொரு வழியில் தொடர்புபட்டுள்ளார்கள். ஷிரந்தி ராஜபக்ஷ சிரிலிய கணக்கு மோசடியில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இலங்கையின் மாதா என்று ஒருசிலர் தற்போது குறிப்பிடுகிறார்கள். இது இவர்களின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது.


அரசியல் பழிவாங்கலை முன்னெடுக்க வேண்டுமாயின் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்தில் பலரை கைது செய்திருப்போம். வழக்குகளை முறையாக விசாரணைகளை செய்வதற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் தொடர்புடைய நிறுவனங்களுக்கான வசதிகளை வழங்கினோம். நீதிமன்றங்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதில் அரசாங்கம் எவ்வகையில் தலையிட்டுள்ளது.


ஊழல்வாதிகள் சிறை செல்லும்போது அவர்களின் குடும்பத்தாருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள்  ஏற்படும் என்பதை நாங்கள் அறிவோம். இதற்கு எம்மால் ஏதும் செய்ய முடியாது. ஊழல்மிக்க அரச தலைவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒருசில அரச அதிகாரிகளும் ஊழல் மோசடிகளுக்கு பழக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மஹிந்த, ரணில் காலத்தில் ஊழலுக்கு பழக்கப்பட்டவர்கள் தற்போது நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்கள். இதில் எமது தவறு என்ன உள்ளது.



எவரையும் பழிவாங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை. நாங்கள் அவ்வாறு நினைக்கவுமில்லை. அவ்வாறு நினைத்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும். மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள். ஒன்று நாங்கள் மீண்டும் வருவோம். அல்லது எங்களை விட சிறந்த தரப்பினர் ஆட்சிக்கு வருவார்கள். எதிர்க்கட்சிகளில் உள்ள சிறந்த உறுப்பினர்கள் ஊழல்வாதிகளுக்கு துணைபோக கூடாது என்று  குறிப்பிட்டுக்கொள்கிறேன்.


22ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது நீதித்துறையின் அதிகாரத்தை ஜனாதிபதி ஆக்கிரமிக்கப்போவதாக குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் தற்போது ஒருசில வழக்கு விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். தங்களுக்கு ஏற்றாற்போல் எதிர்க்கட்சியினர் அடிப்படை கொள்கைகளை மாற்றிக்கொள்கிறார்கள் என்றார்.

Zameera

கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை – விஜித ஹேரத்

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


கச்சத்தீவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கடற்றொழில் நீரியல் வள  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8)  நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கச்சத்தீவு கடற் பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள். அதனை நிராகரிக்கும் வகையிலேயே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கச்சத்தீவு மாத்திரமல்ல அந்த கடல் பரப்பு என்பது இலங்கைக்கும் சொந்தமானது அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். 


அதற்காக நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அது மாத்திரமல்ல. இழுவை மடி படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீது பிரவேசித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அந்த நீதிபதிகள் விடயங்களை முன்வைத்துள்ளார்கள்


இந்திய கடற்பரப்பு மிகவும் அசுத்தமாகவும் இலங்கை கடற்பரப்பு மிகவும் சுத்தமாகவும் காணப்படுகிறது. இந்திய கடற்பரப்பு அசுத்தமாக காணப்படுவதாலேயே அங்கு மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே தமிழ்நாட்டின் மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு எமது கடற்படைப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இந்திய கடற்பரப்பு அசுத்தமான பாலைவனமாக மாறிவிட்டது. 



எனவே சுத்தமாக காணப்படும் இலங்கை கடற்பரப்பு மீது இந்திய மீனவர்கள் கைவைக்கக் கூடாது என்றும் இந்திய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். 


Zameera

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

 


களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.



இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள அவரது மனைவி  சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 


துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Zameera

சிங்கள பௌத்தர்களுக்கு எதிராகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது - தயாசிறி ஜயசேகர

 

சிங்கள பௌத்தர்களுக்கு எதிராகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. வடக்குக்கு ஒரு நீதி, தெற்கிக்கு பிறிதொரு நீதி, ஞானசார தேரரின் காவியுடையை களைத்து பௌத்தர்களின் மீதான வெறுப்பை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை மகிழ்விப்பதற்காகவே ஞானசார தேரர் தண்டிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை எவ்வழியிலாவது நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.ஊழல் குற்றங்களுக்காக நீதிவான் நீதிமன்றத்தில் வழங்கப்படும் பிணையை இரத்துச் செய்து அந்த அதிகாரத்தை மேல் நீதிமன்றத்துக்கு வழங்கும் வகையில் கொண்டு வந்த திருத்தத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை. அவ்வாறு அனுமதியளித்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஆணைக்குழு உண்மையில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகிறது.  எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை கைது செய்வதற்காக அரச அதிகாரிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். ஆணைக்குழு அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கிறது.


கிரிஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழுத்தம் பிரயோகித்துள்ளது.இது முற்றிலும் தவறானதொரு எடுத்துக்காட்டு.


இந்த அரசாங்கம் சிங்கள பௌத்தர்களுக்கு எதிராகவே  ஆரம்பத்தில் இருந்து செயற்படுகிறது. பௌத்தர்களின் உரிமைக்காகவும், சிங்களவர்களுக்காகவும் குரல் கொடுத்த ஞானசார தேரர் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்காக இன்று  தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது காவியுடை களைக்கப்பட்டுள்ளது.இது முற்றிலும் தவறானது. என்றார்.

Zameera

அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 


ஊழலற்ற நாட்டை உருவாக்கி, அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான வேலைத்திட்டத்தையே அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது என பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,


அரசாங்கம் ஆட்சிக்கு வந்து  இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் என்ன செய்திருக்கிறது  என எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் எம்மை நோக்கி கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் 2015இல் அதிகாரத்துக்கு வரும்போது ஊழலை இல்லாமலாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள். ஆனால் தற்போது கைதுசெய்யப்படுபவர்கள் அனைவரும் கடந்த அரசாங்க காலங்களில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களாகும்.



அதேநேரம் ஊழல் மோசடி தொடர்பான தரப்படுத்தலில் எமதுநாடு 2024ஆம் ஆண்டில் 121ஆவது இடத்தில் இருந்தது. ஆனால் எமது இரண்டு வருட காலங்களில் அந்த தரப்படுத்தலில் 107ஆவது இடத்துக்கு வந்துள்ளது. 


அதேபோன்று புள்ளி வழங்கும்  திட்டத்தில் கடந்த இரண்டு  வருடங்களுக்கு முன்னர் ஊழல் ஒழிப்புக்கு எமக்கு 32 புள்ளிகளே கிடைத்திருந்தது. தற்போது  35 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் எமது இரண்டு வருட காலத்தில் ஊழலை ஒழிப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கே இந்த பிரதிபலன்கள் கிடைத்திருக்கின்றன.


மேலும் கடந்த காலங்களில் எமது  நாட்டுக்கு கிடைக்கப்பெற இருந்த பல அபிவிருத்தி திட்டங்கள் இழக்கப்பட பிரதான காரணமாக இருந்தது ஊழல் மோசடிகளாகும். 100 மில்லியன் ரூபாவுக்கு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், சுமார் 30 மில்லியன் ரூபாவே அந்த வேலைத்திட்டத்துக்கு செலவிடப்பட்டிருக்கும். 70 மில்லியன் ரூபா வேறு விடயங்களுக்கு செலவிடப்படுகிறது. 


அதேபோன்று கடந்த காலங்களில் தொழில் வழங்குவதிலும் ஊழல் இடம்பெற்றிருக்கிறது. தங்களுக்கு வாக்களித்தவர்களை தெரிவுசெய்தே தொழில் வழங்கும் நடைமுறை இருந்தது. அதிலும் உயர்ந்தவராக பாதுகாப்புத் துறையிலும் குட்டையானவராக இருந்தால் தொழிலாளர் என்ற அடிப்படையிலே வழங்கிவந்தார்கள்.


ஆனால் எமது அரசாங்கத்தில் அவ்வாறான எந்த நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை.  தகுதியானவர்கள் உரிய விதிப்படி தெரிவுசெய்தே தொழில் வழங்கப்படுகிறது. 


அதேபோன்று எமது அரசாங்கம் தற்போது ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனை வழங்கி வருகிறது. அதனால் முதலீட்டாளர்களுக்கு எமது அரசாங்கம் மீது நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. எனவே, தற்போது சமர்ப்பித்திருக்கும் புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் மூலம் நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Zameera

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றத்துக்கு

 

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 

சபாநாயகருக்கு எதிரான 49 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

பாராளுமன்ற நடைமுறைகளைக் கையாளும்போது சபாநாயகர் பின்பற்றிய சார்புநிலை மற்றும் ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் காரணமாக அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனக் குற்றம் சாட்டியே எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.
 

தமது கட்சி இதற்கு முன்னர் சமர்ப்பித்த சிறப்புரிமைப் பிரச்சினைகள் மற்றும் பிரேரணைகளை எவ்வித நியாயமான காரணமும் இன்றி சபாநாயகர் நிராகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியும் குற்றம் சுமத்தியுள்ளது.
 

பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (8) இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதில் முதல் கையெழுத்தை சஜித் பிரேமதாச பதிவிட்டார்.
 

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

Thursday, October 8, 2026

Zameera

சிறைச்சாலை விதிமுறைகளை புதுப்பிக்க விசேட குழு நியமனம்

 


சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளை புதுப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் முப்பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது. 


இக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் அடங்குகின்றனர்: 


பிரின்ஸ் சேனாதீர - புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் 


பியுமந்தி பீரிஸ் - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் 


வசந்த ஆரியரத்ன - பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் 


ஆர்.எம்.ஜீ. சேனாரத்ன - பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் 


ஏ.சீ. கஜநாயக்க - சிறைச்சாலைகள் திணைக்களம் ஆணையாளர் 


சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் அச்சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட நிலையான கட்டளைகளைக் காலத்திற்கு ஏற்ப மறுஆய்வு செய்வதற்கும், தற்போதைய மத, கலாச்சார, சட்ட, நிர்வாக மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு அமைய அவற்றை புதுப்பிப்பதற்கும் உள்ள தேவையை கருத்திற்கொண்டே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 


சிறைச்சாலை அமைப்பின் செயல்திறன், நல்லாட்சி, பாதுகாப்பு, கலாச்சார விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களை அடையாளம் கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Zameera

கச்சா எண்ணெய் விலை உயர்வு


 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரை இன்று உயர்ந்துள்ளது. 


அதன்படி பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலை 105.1 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 


டபுள்யு டி.ஐ கச்சா எண்ணெய் 92.63 அமெரிக்க டொலராக அதிகரித்து விற்பனையாகின்றது. 


இதுதவிர மேர்பன் ரக கச்சா எண்ணெய் 110.7 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.