
இன்று 75 மி.மீ க்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (28) ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மாத்தறை பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 70 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் இன்று வெள்ளிக்கிழமை (28) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவர்கள் இருவரும் நீண்டகாலமாகவே இப் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

1,400க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய பனி மற்றும் இடிபாடுகளின் பெருக்கே இந்த பேரிடருக்குக் காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
அந்தப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சேறு கலந்த வெள்ள நீர், நகரங்கள் மற்றும் கிராமங்கள் ஊடாகப் பாய்ந்து வீடுகள், பாலங்கள் மற்றும் அணைகளை அழித்துள்ளதுடன், வாகனங்களையும் அடித்துச் சென்றுள்ளது.
காணாமல் போனவர்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இமயமலைப் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் மற்றும் திபெத்திலுள்ள புனித கைலாஷ மலையை தரிசிக்கச் சென்ற அதிகளவிலான இந்து பக்தர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 389 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 910 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புகொள்ள முடியாதவர்களில் 517 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(27) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 585 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மேலும் தெரிவித்தார்.

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதிப் பங்களிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த சவாலான தருணத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிஷிர் கனாலுடன் இன்று காலை தொலைபேசியில் கலந்துரையாடி இலங்கையின் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக எதிர்காலத்தில் இலங்கை வழங்கக்கூடிய மேலும் பொருத்தமான ஒத்துழைப்பு முறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல், நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.
கம்பஹாவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும், அதனை யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசு நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல், நெல்லுக்கு 150 ரூபாய் நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல் மயமாக்குவதன் மூலம், வடகொரியாவைப் போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகாரப் போக்கை நோக்கி அரசு நகர முற்படுகின்றது.
மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட முடியாமல், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின் உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும், சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தவும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.

அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மஹரகம பகுதியில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள். இந்த திருத்தம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சாதகமானதே தவிர, பாதகமானதல்ல.
எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்கள், பலர் பிணையில் உள்ளார்கள். கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்படுகின்றபோது இவர்கள் கலக்கமடைந்துள்ளார்கள். ஊழல்வாதிகள் சிறைக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர மக்களின் பிரச்சினையல்ல.
அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.
இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்ஷர்களின் காலத்தில்தான் இல்லாமல் போனது. முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் முறையற்ற வகையில் பதவி நீக்கினார்கள். அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்றார்.


கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையுமே இன்று எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் விதைத்தவற்றையே இன்று அறுவடை செய்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வியாழக்கிழமை (27) கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டதால், தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, பொலிஸ் விசாரணைகள் மூலம் நீதியை நிலைநாட்டி வருகிறது.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் போது இடம்பெற்ற வீண்விரையங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன. முன்னாள் சபாநாயகர் ஒருவர் இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாவை எரிபொருளுக்காக மட்டும் செலவிட்டுள்ளார்.
அப்போதைய பிரதி சபாநாயகர் ஒருவர் தனது தனிப்பட்ட வாகனத்திற்கு பாராளுமன்ற சலுகைகளைப் பயன்படுத்தி 85 இலட்சம் ரூபா மதிப்பிலான எரிபொருளைப் பயன்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளன. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியில் இவ்வாறான ஊழல்கள் மற்றும் வீண்விரையங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 62 முக்கிய குற்றவாளிகள் வரை பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரின் தலையீட்டினால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த வெற்றிகளைக் கண்டு எதிர்கட்சியினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
பொலிஸ் துறை, நீதித்துறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகத் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வழக்குகளைத் தாமதப்படுத்த எதிர்கட்சியினர் முயல்கின்றனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாகச் செயற்படும் என்றார்.

அன்று சான்றிதழ் தரவுத் தொகுதி செயலிழந்ததால், விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அமைப்பில் இருந்து நீங்கியுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மீண்டும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் சான்றிதழை வழங்க முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், முந்தைய விண்ணப்பத்திற்காக அறவிடப்பட்ட 5,100 ரூபாய் கட்டணம், விண்ணப்பதாரர் செலுத்திய அட்டையிலேயே மீண்டும் மீளளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை அழைத்தல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் தரவுத் தொகுதி ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிற்பகல் 12.50 மணி முதல் செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அது சீர்செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது வழமை போன்று சான்றிதழ் அறிக்கைகளுக்காக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளமையால் இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
– பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வலியுறுத்து
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"ஈரான் மற்றும் ஓமான் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளின் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து சுமுகமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போதெல்லாம், அந்தப் சுமையை மக்கள் மீது சுமத்தி உடனடியாக இங்கு எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம், உலகச் சந்தையில் விலை குறையும்போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கத் தயங்குவது ஏன்?
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் மீனவர்கள், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் குறையும். எனவே, உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நீண்டகால இன மோதல்கள் காரணமாக இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வாழும் அனைவரும் அந்த கொடூரமான அழிவுகரமான அனுபவங்களின் பாதிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
மேலும், மீண்டும் எவ்வித இன மோதல்களும் உருவாக இடமளிக்கப்பட மாட்டாது எனத் தான் உறுதியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.
முன்னர் செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபட்ட முறையில் செயற்படுத்தப்படுவதாகச் சமூகத்தில் ஒரு கருத்து நிலவிய போதிலும், நாட்டை கட்டியெழுப்புவதன் மிக முக்கிய பகுதியாகச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தற்போது உறுதிப்படுத்தி வருவதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்துடனான அனைத்து முக்கிய கொடுக்கல் வாங்கல்களையும் வீட்டிலிருந்தபடியே இணையவழி முறையில் மேற்கொள்ளக்கூடிய அமைப்பொன்றை அறிமுகப்படுத்தி, அரச சேவையை மேலும் கவர்ச்சிகரமான தொழிற்துறையாக மாற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தாமும் அரசாங்கமும் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தினாலும் மக்களுக்குத் தீங்கு ஏற்பட இடமளிக்க மாட்டோம் என மேலும் உறுதியளித்த ஜனாதிபதி, வரவிருக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டின் மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை விரைவுபடுத்தி, நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதையே எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
தீர்மானங்களை எடுக்கும் போது சாத்தியமான அனைத்துக் கோணங்களிலும் அது ஆராயப்படுவதால், சிறிய சிறிய முரண்பாடுகள் எழுந்தாலும் மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
நமது நீதி வழங்கும் நிறுவனங்களில் ஒரு பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது.
2006 ஆம் ஆண்டின் வழக்கிற்குத் தீர்ப்பு 2026 ஆம் ஆண்டில்தான் கிடைக்கிறது. 2017 ஆம் ஆண்டின் ஒரு வழக்கு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் ஒரு சாட்சியத்தைக் கூடப் பெறவில்லை என்றால், எப்போதுதான் மக்கள் நீதியின் மீது நம்பிக்கை வைப்பார்கள்? அந்த நம்பிக்கை உருவாகப்போவதில்லை.
எனவே இந்தச் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக பல நிறுவனங்களைப் பலப்படுத்த வேண்டும்.
நமது குற்றப் புலனாய்வுத் துறை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம்.
அதேபோல் நீதிமன்றக் கட்டமைப்பு ஆகிய இவை அனைத்தையும் செயற்திறனுடன் செயல்பட வைத்து, தேவையான சட்டங்களை இயற்றி, சட்டப் பாதுகாப்பையும் செயற்திறனுடன் செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும், மனித வளத்தையும் வழங்குவதன் மூலமே இவற்றை செயற்திறனுள்ளதாக மாற்ற முடியும்.
அதற்காக நாம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அந்த ஒவ்வொரு முன்னெடுப்பிலும் நமது அரசாங்கம் நம்பிக்கை வைப்பது இந்த நாட்டின் மக்கள் பலத்தின் மீதே ஆகும்.
யார் எந்த வகையில் சிறிய சிறிய எதிர்ப்புகளைக் காட்டினாலும்,மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் பின்னோக்கிப் பெறப்பட மாட்டாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்.
பின்வாங்கப் போவதில்லை. ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது வரக்கூடிய நன்மைகள், தீமைகள்,ஏனைய புறக் காரணிகள் என அனைத்தையும் தீர்மானம் எடுப்பதற்கு முன்பாகவே ஆராய்வோம்.
ஆனால் தீர்மானம் எடுத்த பிறகு,பின்னோக்கிப் போவதில்லை என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன்.அது நமது நாட்டிற்கு அவசியமானது.
அதேபோல் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை மாற்றுவதற்கும் நாம் எந்த வகையிலும் தயங்கப் போவதில்லை. எப்போதும் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் அரசாங்கம் இது.
நபிகள் நாயகம் அவர்களின் இந்த பிறந்த நாளில், அவரது போதனைகள் மற்றும் இறுதி உரையின் அர்த்தத்தையும், அதிலுள்ள அமைதி பற்றிய எதிர்பார்ப்பையும், அதில் இருந்த மனிதநேயம் பற்றிய நம்பிக்கையையும்,அதில் இருந்த பொருளாதாரம் மற்றும் வறுமை பற்றிய பார்வையையும் இவை அனைத்தையும் யதார்த்தமாக்குவதற்குத் தேவையான ஒரு ஆட்சியை நாம் இணைந்து உருவாக்கியுள்ளோம்.
இத்தகைய ஆட்சி உங்களது ஆதரவுடனும் உங்களது பலத்துடனும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.